முகப்பு


1464.மைந்தனார் சிலுவை மீது மாதுயருடன் வருந்த
மைந்தனார் சிலுவை மீது மாதுயருடன் வருந்த
நொந்தழுதாள் தாய் மரி

1. திருமகன் அறையுண்ட சிலுவை அடியில் நின்ற
தேவதாய் நொந்தழுதாள்

2. வேதனைக் கடலமிழ்ந்த மாதா ஆத்துமம் வதைய
வாள் பாய்ந் தூடுருவிற்று

3. நேய மகனை இழந்த தாய் அனுபவித்த துயர்
தானுரைக்க நாவுண்டோ?

4. அருமையாய் ஈன்ற சுதன் அவசுதையை கண்டிளகி
உருகிப் புலம்பினாள்

5. இரட்சகர் திருத்தாயார் இக்கொடிய வாதைப்பட
யார் கண்டழாதிருப்பார்

6. திருமகன் துயரத்தால் உருகும் தாயைக் கண்டுள்ளம்
கரையாதார் யாருண்டு?

7. அன்புள்ள தம் திருமகன் துன்ப துயர் அவசுதையில்
தன் சீவன் தரக் கண்டாள்

8. பட்சவூருணி மாதாவே பரிதபித்தே உம்மோடு
பாவி நான் அழச் செய்யும்

9. ஆதி இயேசுவை நேசித்தே யான் அவருக்கினியனாய்
அன்பால் என்னுள்ளம் சுடும்

10. தேவ தாயே தயை செய்து பாவி என்னிருதயத்தில்
இயேசு காயம் பதியும்

11. சிலுவை அடியில் நின்று தேவதாயே உம்மோடு நான்
புலம்ப ஆசிக்கின்றேன்

12. கன்னியர் அரசே தாயே என் கண்ணீரை உம்முடைய
கண்ணீரோ டேற்றருளும்

13. அன்பாம் அக்கினி மூட்டி அடியோரைத் தீர்வை நாளில்
ஆதரிப்பீர் கன்னியே

14. மண் உடல் உயிர் பிரிந்தால் வான் மோட்சத் தாத்துமம் சேர்ந்து
வாழவுஞ் செய்தருளும்
1465.எனக்காக இறைவா எனக்காக
எனக்காக இறைவா எனக்காக
இடர்பட வந்தீர் எனக்காக

1. பழிகளைச் சுமத்தி பரிகசித்தார் - உயிர்
பறித்திட எண்ணித் தீர்ப்பளித்தார்

2. தாளாச் சிலுவை சுமக்க வைத்தார் - உம்மை
மாளாத் துயரால் துடிக்க வைத்தார்

3. விழுந்தீர் சிலுவைப் பளுவோடு - மீண்டும்
எழுந்தீர் துயர்களின் நினைவோடு

4. தாங்கிட வொண்ணாத் துயருற்றே - உம்மைத்
தாங்கிய அன்னை துயருற்றாள்

5. மறுத்திட முடியா நிலையாலே - சீமோன்
வருத்தினார் தன்னை உம்மோடு

6. நிலையாய்ப் பதிந்தது உம் வதனம் - அன்பின்
விலையாய் மாதின் சிறு துணியில்

7. ஓய்ந்தீர் பளுவினைச் சுமந்ததனால் - அந்தோ
சாய்ந்தீர் நிலத்தில் மறுமுறையும்

8. விழிநீர் பெருக்கிய மகளிருக்கு - அன்பு
மொழிநீர் நல்கி வழி தொடர்ந்தீர்

9. மூன்றாம் முறையாய் நீர் விழுந்தீர் - கால்
ஊன்றி நடந்திடும் நிலை தளர்ந்தீர்

10. உடைகள் களைந்திட உம்மைத் தந்தீர் - இரத்த
மடைகள் திறந்திட மெய் நொந்தீர்

11. பொங்கிய உதரம் வடிந்திடவே - உம்மைத்
தொங்கிடச் செய்தார் சிலுவையிலே

12. இன்னுயிர் அகன்றது உமை விட்டு - பூமி
இருளில் ஆழ்ந்தது ஒளி கெட்டு

13. துயருற்றுத் துடித்தாள் உளம் நொந்து - அன்னை
உயிரற்ற உடலின் மடிசுமந்து

14. ஒடுங்கிய உமதுடல் பொதியப்பட்டு - நீர்
அடங்கிய கல்லறை உமதன்று
1466.நிந்தையும் கொடிய வேதனையும்
நிந்தையும் கொடிய வேதனையும்
நிறைந்துள்ள உம் திருப்பாடுகளை
சிந்தையில் கொண்டு தியானிக்கவே
தினம் அருள் புரிவீர் ஆண்டவரே
சிலுவையிலேதான் மீட்சியுண்டு தேடும் வானக மாட்சியுண்டு

1. இயேசுவை சிலுவையில் அறையுமென்றோம்
இடியெனக் கூக்குரல் எழுப்பி நின்றோம்
மாசற்ற செம்மறி ஆனவர்க்கு
மரண தண்டனையாம் விதித்து நின்றோம்
அவரோ மெளனம் காத்துநின்றார்
அகமுவந்ததனை ஏற்றுக்கொண்டார் - சிலுவையிலே

2. பாவத்தின் சுமையாம் சிலுவைதனை
பரமனின் திருவுளம் நிறைவுறவே
ஆவலாய்த் தோளில் சுமந்து சென்றார்
ஆண்டவர் கல்வாரி மலை நோக்கி
எனைப்பின் செல்பவன் தனை மறுத்து
சிலுவையை எடுத்துப் பின் செல்கவென்றார் -சிலுவையிலே

3. சிலுவையின் பாரம் அழுத்தியதால்
திருமகன் தரையில் விழலானார்
வலுவற்ற அடியோர் எழுந்திடவே
வல்லப தேவா வரமருள்வீர்
எமைப் பலப்படுத்தும் அவராலே
எல்லாம் செய்திடக் கூடுமன்றோ - சிலுவையிலே

4. உதிரம் வியர்வைத் தூசியினால்
உருவிழந்திருந்த தன் மகனை
எதிர்கொண்டு வந்த அன்னை மனம்
இயம்பருந் துயரால் கலங்க வைத்தோம்
அந்திய காலம் வரையெங்கள்
அடைக்கலமாய் நீ இருந்திடம்மா - சிலுவையிலே

5. உம் திருச்சிலுவையைச் சுமந்து செல்ல
உதவிய சீமோன் போல் யாமும்
எம் அயலார்க்குத் தயங்காமல்
என்றுமே உதவிடச் செய்தருள்வீர்
நிரந்தரமாகப் பிறரன்பில் நிலைத்திடும்
வரம் தர வேண்டுகின்றோம் - சிலுவையிலே

6. துகள்படிந்திருந்த திருமுகத்தைத்
துணிந்து வெரோணிக்காள் துடைக்க வந்தாள்
இகமென்ன சொல்லும் என நினைந்து
இழந்திடலாமா விசுவாசம்
இயேசுவை மனிதர் முன் ஏற்றுக்கொள்வோர்
எய்துவர் அழியாப் பேரின்பம் - சிலுவையிலே

7. மீண்டும் மீண்டும் பாவத்திலே
விழுந்திடும் பாவியை மீட்டிடவோ
ஈடிணையில்லா இறைமகனார்
இவ்விதம் புழுதியில் விழலானார்
நம்மை நிதம் இறைவன் மன்னிப்பதால்
நாமும் பிறரை மன்னிப்போம் - சிலுவையிலே

8. எங்கணும் நன்மை செய்தவர்க்கு
ஏனிந்தக் கோலம் என வருந்திப்
பொங்கிடும் கடல்போல் அழுதரற்றி
புண்ணிய மாதரும் புலம்பினரே
அழுகின்ற பேர்கள் பேறுபெற்றோர்
ஏனெனில் ஆறுதல் அடைந்திடுவர் - சிலுவையிலே

9. அளவற்ற களைப்போ பெருந்துயரோ
அடியற்ற மரம்போல் விழலானார்
உளந்தொறும் தாழ்ச்சி தழைத்திடவே
உயர்பரன் அடிமை போல் விழலானார்
தனையுயர்த்திடுவோன் தாழ்வடைவான்
தனைத் தாழ்த்திடுவோன் உயர்வடைவான்- சிலுவையிலே

10. உடையினை சேவகர் பிடித்திழுத்து
உரித்திடும் வேளை காயமெல்லாம்
மடைதிறந்தோடும் வெள்ளமென
மறுபடி உதிரம் சொரிந்ததையோ
அந்நியரும் வழிப்போக்கரும் நாம்
அடக்குவோம் தீய ஆசைகளை - சிலுவையிலே

11. கழுமரம் என்ற சிலுவையிலே
களங்கமில்லாத இறைமகனை
விழுமிய நலம் பல புரிந்தவரை
வெறுத்திருப்பாணியால் அறைந்து வைத்தோம்
ஒரு கணமேனும் இயேசுவேயாம்
உமைப் பிரியாமல் வாழச் செய்வீர் - சிலுவையிலே

12. நண்பனுக்காகத் தன்னுயிரை
நல்குவதினுமேலான அன்பு
கொண்டவர் யாருமே இல்லையன்றோ?
கொடுத்தார் இயேசு தம் உயிர் நமக்காய்த்
தமையன்பு செய்தார் நமக்காக
தமைமுழுதும் அவர் கையளித்தார் - சிலுவையிலே

13. மண்ணில் கோதுமை மணி விழுந்து
மடிந்தால் தானே பலன் அளிக்கும்
விண்ணில் வாழ்வு நமக்கருள
விருப்புடன் இயேசு உயிர்துறந்தார்
வியாகுல அன்னை மடிவளரும்
மீட்பரே எம்மைக் காத்தருள்வீர் - சிலுவையிலே

14. உலகின் ஒளியாய்த் தோன்றியவர்
ஒரு கல்லறையுள் அடங்கிவிட்டார்
விலகும் மரண இருள் திரையும்
விளங்கும் கிறித்துவின் அருள் ஒளியால்
கிறித்துவே எனக்கு உயிராகும்
மரணம் எனக்கு ஆதாயம் - சிலுவையிலே
1467. எங்கே சுமந்து போகிறீர் பொங்கும் பகைவராலே
எங்கே சுமந்து போகிறீர் பொங்கும் பகைவராலே
அங்கம் நடுநடுங்க எங்கே போகிறீர்

1. மனித பாவத்தாலே மரணத் தீர்ப்பைப் பெற்று
தூய செம்மறி போலே துக்கத்துடன் வருந்தி எங்கே போகிறீர்

2. பாரச் சிலுவை மரம் பாவத்தின் சுமைதாங்கி
பாசத்துடன் அணைத்து பாரத்துடன் நடந்து எங்கே போகிறீர்

3. கல்வாரிமலை நாடி தள்ளாடி தரை வீழ்ந்து
எல்லோரின் பாவங்களைத் தனிமையாய்ச் சுமந்து எங்கே போகிறீர்

4. மாமரிகன்னி அன்னை மகனின் கோலங்கண்டு
மாதுயருடன் வாடி மனம் நொந்து வருந்த எங்கே போகிறீர்

5. உதிரமாறாய்ச் சிந்தி உள்ள உரமிழந்து
சீரோன் சீமோன் துணையை ஏற்று வழி நடந்து எங்கே போகிறீர்

6. கர்த்தனே உம் வதனம் இரத்தக்கறையால் மங்கி
உத்தமி வெரோணிக்கம்மாள் வெண் துகிலாற்றுடைத்து - எங்கே

7. பாவங்கள் ஒன்றாய்ச் சேர்ந்த பாரச்சுமையினாலே
மீண்டும் தரையில் வீழ்ந்தும் வீரத்துடன் எழுந்து எங்கே போகிறீர்

8. புண்ணிய மகளிர் பலர் புலம்பி அழும் வேளை
ஆறுதல் கூறி நீரும் நேசக் கண்ணீர் சொரிந்து எங்கே போகிறீர்

9. சிலுவை பாரத்தாலே மாமரி ஏகமைந்தன்
மூன்றாம் முறை தரையில் முகம் படிந்தெழுந்தும் எங்கே போகிறீர்

10. நீளாடை கழற்றவே கோடா கோடிக் காயங்கள்
இரத்தம் ஆறாய்ப் பெருகி வேதனையால் வருந்தி எங்கே போகிறீர்

11. நீட்டிய கால் கரத்தில் நீண்ட இரும்பாணிகள்
நிசுட யூதர் அறைந்தும் நேசத்திலே வெந்து பலியாகினீர்

12. சிலுவை பீடமேறி மும்மணி நேரந் தொங்கி
அரிய பிதாவை வேண்டி ஆருயிர் ஒப்படைத்து பலியாகினீர்

13. மரி தாய் மடிமீதில் மரித்த மகன் தாங்கி
ஏழு சோக வாள்களால் ஊடுருவி வருந்தி தாயே நின்றீர்

14. கர்த்தரின் உடல்தனை கல்லறைக்குள் அடக்கி
உத்தான சீவனுமாய் உயிருடன் எழுந்து எப்போ வருவீர்
1463. மனத்துயர் மன்றாட்டு
என் இறைவனாகிய தந்தையே / நன்மை நிறைந்தவர் நீர். / அனைத்திற்கும் மேலாக அன்புக்கு உரியவரும் நீரே. / என் பாவங்களால் உமது அன்பைப் புறக்கணித்ததற்காகவும் / நன்மைகள் செய்யத் தவறியதற்காகவும் / மனம் வருந்துகிறேன். / உமது அருள் உதவியால் / இனிமேல் பாவம் செய்வதில்லை என்றும் / பாவத்துக்கு ஏதுவான சூழ்நிலைகளை விட்டு விலகுவேன் என்றும் / உறுதி கூறுகிறேன் / ஆமென்.