முகப்பு


1330.அழைக்கும் தெய்வமே அன்புசெய்யும் தெய்வமே
அழைக்கும் தெய்வமே அன்புசெய்யும் தெய்வமே
என்னை அனுப்பும் தெய்வமே உம் மக்களின் விடுதலைக்காய்
என்னை அனுப்பும் தெய்வமே உம் மக்களின் விடுதலைக்காய் - 2
என்னைத் தேர்ந்ததுவும் நீ தான் என்றாய்
என்னை அழைத்ததுவும் நீ தான் என்றாய் - 2

1. நான் சிறுவன் என்றேன் சொல்லாதே என்றாய்
ஐயோ பயம் என்றேன் அஞ்சாதே என்றாய் - 2
பேசவும் தெரியாது என்றேன் பேசுவதோ நீ என்றாய்
அசுத்த உதடுகள் என்றேன் அன்பின் தீயினால் சுட்டு விட்டாய்
என் சொற்களை உன் வாயில் வைத்துள்ளேன்
பிடுங்கவும் தகர்க்கவும் அழிக்கவும் கவிழ்க்கவும்
கட்டவும் நடவும் இன்று நான் உன்னை
பொறுப்பாளனாக ஏற்படுத்தியுள்ளேன்

2. நான் கலங்கி நின்றேன் கலங்காதே என்றாய்
நான் தயங்கி நின்றேன் ஏன் தயக்கமென்றாய் - 2
பாதையும் தெரியாது என்றேன் பாதையுமே நீ என்றாய்
தகுதிகள் எனக்கில்லை என்றேன்
உந்தன் ஆவியால் என்னைத் தொட்டு விட்டாய்
1331.அன்பில் வளர்ந்திட என்னை அழைத்த என் தெய்வம்
அன்பில் வளர்ந்திட என்னை அழைத்த என் தெய்வம்
இன்பம் கொணர்ந்திட சொந்தம் வளர்த்த என் தெய்வம்
என்ன தவம் செய்வேன் நான் என் தேவனே
என் ஆசையெல்லாம் அன்புதான் என்றும் அன்புதான்

1. வானம் பூமி என்று எங்கும் எல்லை வைத்தான்
செல்வம் நிலை இல்லை என்று அன்றே சொல்லி வைத்தான்
என் உள்ளம் முழுதும் பண்பின் ஊற்றை
எல்லை இன்றி வைத்தான் காலமும் பாடவைத்தான்
செல்லும் பாதைகள் எங்கெங்கும் நேசம் நிலைபெறும்

2. பாதம் கழுவிடவும் பணிவாழ்வு சிறந்திடவும்
காலம் நிறைவேறிடவும் கடவுள் அரசு மலர்ந்திடவும்
கல்வாரிப் பாதை காட்சியான தியாகம் வேண்டி நின்றேன்
நெஞ்சினில் அருள் வளர்த்தேன்
இங்கு வாழும் மனிதர்கள் வாழ்வு சிறந்திட
1332.ஆண்டவரே நீரே என்னை மயக்கிவிட்டீர்
ஆண்டவரே நீரே என்னை மயக்கிவிட்டீர்
நானும் மயங்கிப்போனேன்

1. தாயின் கருவினிலே உருவாக்கினீர்
தடுக்கி விழும்போது தாங்கி நின்றாய்
தூர சென்றாலும் துணையாய் வந்தீர்
துன்பத்தில் வாழ துணிவைத் தந்தாய்
அஞ்சாதே என் மகளே உன்னோடு நான் இருப்பேன்
கலங்காதே என் மகளே கரம் பிடித்து நடத்திடுவேன்
உலகம் முடிவுவரை உன்னோடு நான் இருப்பேன்

2. எளியோர்க்கு நற்செய்தி சொல்லிடுவாய்
விடுதலை வாழ்வுக்கு உழைத்திடுவேன்
உலகிற்கு ஒளியாய் விளங்கிடுவாய்
உண்மைக்குச் சாட்சி சொல்லிடுவேன் - அஞ்சாதே
1333.இறைவன் தாம் முன்குறித்து
இறைவன் தாம் முன்குறித்து
வைத்தோரை அழைத்திருக்கின்றார்
தாம் அழைத்தோரை தமக்கு ஏற்புடையோராக்கி இருக்கின்றார்
தமக்கு ஏற்புடையோரைத் தம் மாட்சியில் பங்கு பெறச் செய்தார்
இந்நிலையில் நான் இருப்பது இயேசுவே உம் அருளால் தான்
வாழ்வது நானல்ல என்னில் நீயே வாழுகின்றாய் - 2

1. கிறித்து உம்மை ஆதாயமாக்க உம்மை மட்டும் ஆதாயமாக்க
அனைத்தையும் குப்பையெனக் கருதுகின்றேன்
எனது கல்வி பட்டம் பதவி செல்வம் புகழ் கெளரவம் எல்லாம்
இயேசுவே உமக்காய்த் தூசியாய் உதறுகின்றேன்
உம்மைப் பற்றிய அறிவில் எனது ஒப்பற்ற செல்வம்
உம்மோடு என்றும் இணைந்திருக்கவே
நான் இவ்வாறு கருதுகின்றேன்
சா சச நிச கரி சநி நிச பா
பா ப நீ நி சா ச கரி ரிசா
சகம சக மா மா கமப கம பா பா
பச நிச நிப மா மப கப பா

2. கடவுள் நம் சார்பாய் இருக்கும் போது
அவரே நம் பக்கம் நிலையாய் இருக்கின்ற போது
நமக்கு எதிராக இருப்பவர் யார்
கிறித்துவின் அன்பினின்று நம்மைப் பிரிப்பது எது எந்த சக்தி
இன்னலோ இடரோ சாவோ எதுதான் நம்மைப் பிரிக்க இயலும்
இயேசுவே உம் வழியாய் வந்த கடவுளின் அன்பினின்று யாரும்
எதுவும் நம்மைப் பிரிக்க முடியாது
1334.இறைவனின் ஆவி என் மேலே
இறைவனின் ஆவி என் மேலே
அவர் என்னை இன்று அபிசேகம் செய்துள்ளார்
இறைவனின் ஆவி என் மேலே - 2

1. ஏழைக்கும் நற்செய்தி உண்டு
பலவகை சிறைப்பட்டோருக்கும் விடுதலை உண்டு
ஆள்பவர் அடக்கியே ஒடுக்கும் - 2
வறியவர் உரிமை பெறுவதன் தொண்டு - 2

2. குருடர்கள் விழி பெறவேண்டும்
உலகத்தின் மெய்நிலை பார்த்திட வேண்டும்
குறைகளும் மறைந்தினி ஒருநாள் - 2
அருள்தரும் ஆண்டென மலர்ந்திட வேண்டும் - 2
1335. இறைவனின் ஆவி நிழலிடவே
இறைவனின் ஆவி நிழலிடவே
இகமதில் அவர் புகழ் பகர்ந்திடவே
என்னை அழைத்தார் அன்பில் பணித்தார்
அவர் பணிதனைத் தொடர்ந்திடவே

1. வறியவர் செழிப்பினில் வாழ்ந்திடவும்
அடிமைகள் விடுதலை அடைந்திடவும்
ஆண்டவர் அரசில் துயரில்லை - என
வான் அதிரப் பறைசாற்றிடவும் - என்னை

2. குருடரும் ஒளியுடன் நடந்திடவும் குவலயம் நீதியில் நிலைத்திடவும்
அருள்நிறை காலம் அவனியிலே - இங்கு
வருவதை வாழ்வினில் காட்டிடவும் - என்னை
1336.உன்னை மறந்திட மாட்டேன்
உன்னை மறந்திட மாட்டேன்
உன்னைப் பிரிந்திட மாட்டேன்
என்றென்றும் உனக்காக இருப்பேன்
உன்னை விலகிட மாட்டேன்
உன்னைக் கைவிட மாட்டேன்
என்றென்றும் என் அன்பைப் பொழிவேன்
நம்மை மறந்திட மாட்டார்
நம்மைப் பிரிந்திட மாட்டார்

1. என்றென்றும் நமக்காக இருப்பார்
நம்மை விலகிட மாட்டார்
என்றென்றும் தம் அன்பைப் பொழிவார்
அஞ்சாதே நீ அஞ்சாதே உன் தேவன்
நான் என்றும் உன்னோடு
கலங்காதே நீ திகையாதே என் வலிமை
என் திறமை உன்னோடு

2. எந்தன் உருவிலே உனை நினைத்தேன்
எந்தன் சாயலில் உனைப் படைத்தேன்
எந்தன் கைகளில் உனைப் பொறித்தேன்
எந்தன் நெஞ்சினில் இடம் கொடுத்தேன்
காக்கின்ற தேவன் உனை மீட்கின்ற தேவன்
என்னை என்றும் நீ அன்பு செய்திடு - 2 (நன்மை)

3. உந்தன் உறவினை நான் நினைத்தேன்
என் உயிராக உடலாக உனை மதித்தேன்
உடன்படிக்கையினைக் செய்து உனை அழைத்தேன் - 2
உறுதுணையாய் என்றும் உன் உடனிருப்பேன்
வழிகாட்டிச் செல்வேன் நான் ஒளி சொல்லித்தருபேன்
பசிதாகம் போக்கி இளைப்பாற்றி மகிழ்வேன்
எந்தன் அன்பினில் நீ என்றும் நிலைத்திடு - 2
1337.உனக்கே புகழ்கீதம் இசைப்பேன் எந்த நாளும்
உனக்கே புகழ்கீதம் இசைப்பேன் எந்த நாளும்
உனிலே எந்தன் நெஞ்சம் உறவில் இணைந்து மகிழும்
என் உயிரின் உயிரான சொந்தமே
உன் அன்பால் எனைத் தேற்ற வா
நிறைவாழ்வின் வழியான தெய்வமே நான் வாழ வழிகாட்ட வா

1. சொந்தங்கள் எனைப் பிரிந்தாலும் சோர்வில்லை
சுகமாய் நானிருப்பேன் உன்னாலேதான்
நீங்காத துன்பம் வந்தாலும் தளர்வில்லை
நிலையாய் நானிருப்பேன் உன்னாலேதான்
கண்மூடும் வேளை கலக்கமில்லை உன்னாலேதான்
எல்லாமே இன்பம் துன்பமில்லை உன்னாலேதான்

2. என் அன்னை என்னைத் தாங்கும் முன்
பெயர்சொல்லி என்னை நீ அழைத்தாய் உனக்காகத்தான்
உன் கையில் என்னைப் பொறித்து வைத்தாய்
உன் சிறகின் நிழலில் அரவணைத்தாய் உனக்காகத்தான்
என் வாழ்வின் பெருமை எனக்கில்லை உனக்காகத்தான்
என் ஆயுட்காலம் எனக்கில்லை உனக்காகத்தான்
1338.எளிய மனம் ஒன்றின் பாடல்
எளிய மனம் ஒன்றின் பாடல்
எங்கே என் இறை என்ற தேடல் - 2
இதழ் விரித்த பூக்களிலும் இரவு தந்த நிலவினிலும்
இதம் பரப்பி நடந்து போன தென்றலிலும்
அடித்த புயலினிலும் அடங்காத கடலினிலும்
ஓடும் நதியிலும் ஆடும் மயிலிலும்
கானக வெளியிலும் காலை ஒளியிலும்
சுழலும் பூமியிலும் மழலை அழகிலும் - 2
மலர்ந்த மலர்ந்த முகத்திலும் மனித அன்பிலும்
சா சநி சா சநி சா சநி சநி சநி - 2
சக ரிம கரி சநி சரி சநி சப மா
கச நிரி சநி பம மப மக கரி ரிக சா

1. திருவருளே உன் அருகினில் வர வர அமைதியின் தரிசனம் ஆகும்
அகநிறைவே உன் அன்பினில்
அனுதினம் வளர்ந்திட எனக்கோர் ஆசை
அகம் மலரும் உன் ஒளி படரும்
பணிவேன் உன் அணியோடு என் பீடம் அழகாகும்
உண்மை அங்கு தீபம் ஆகும்
நீதிக் கனிகளைக் காணிக்கையாக்குவேன்
ஏழை மனிதரின் கண்ணீர் போக்குவேன்
மனிதம் உயர்வெனச் சங்கே முழங்கு நின்று முழங்கு
எங்கும் மனிதம் என்று முழங்கு - 2
உன்னைத் தேடினேன் அதில் என்னையும் தேடினேன்

2. காலம் இது அருளின் காலம் அருள் புரிய - 2
கருணைக் கரம் விரியும் காலம் கருணைக்கரம் விரிந்து - 2
பெறுவதை விடினும் மேலாய்ப் பகிர்வதில் இன்பம் கண்டேன்
அறநெறி நின்றிடும் வாழ்வில் - என்
அகம் நிறைவடைவதை உணர்ந்தேன்
பணிவேன் உன் அணியோடு என் பீடம்
அழகாகும் உண்மை அங்கு தீபம் ஆகும் - ஓடும் நதியிலும்
1339.என் மக்களின் அழுகை கேட்டேன்
என் மக்களின் அழுகை கேட்டேன்
சுமை சுமக்கும் வலிகள் அறிவேன்
ஆறுதல் கூறிடவும் ஆதரவாகிடவும்
யாரை அனுப்புவேன் யாரை அனுப்புவேன் - 2

1. கற்றதை உணர்த்தியே களைத்தவரை ஊக்குவித்தே
கண்களை கருணையின் ஒளியால் நிரப்புவேன்
கடவுளே நீர் என்னோடு இருக்க சிலுவையும் சுமப்பேன்
இதோ நான் இருக்கிறேன் இன்றே நான் வருகிறேன் - 2
கடல் கடந்து போனாலும் தீ நடுவே நடந்தாலும்
தீமை உன்னை அணுகாது
நீ கலங்கிடாமலும் களைத்துப் போகாமலும்
உன் கால்கள் தடுமாறாமலும்
நாம் உன்னோடு இருந்து உன்னை உறுதிசெய்து
உன் கரம் பிடித்து அன்பால் வழிநடத்துவோம்

2. கூக்குரல் இன்றியே உம் அரசினை அறிவிப்பேன்
நீதியின் சார்பிலே நின்றிடத் தயங்கிடேன்
கடவுளே உந்தன் ஆவி என்னைக் காலமும் நடத்தும்
இதோ நான் இருக்கிறேன் இன்றே நான் வருகிறேன் - 2
என் மக்களின் அழுகை கேட்டேன்
சுமை சுமக்கும் வலிகள் அறிவேன்
ஆறுதல் கூறிடவும் ஆதரவாகிடவும்
உன்னை நான் அனுப்புவேன் அபிசேகம் செய்கிறேன் - 2
1340.என்னைப் பெயர் சொல்லி அழைத்த தெய்வமே
என்னைப் பெயர் சொல்லி அழைத்த தெய்வமே
நான் உருவாகுமுன்னே எனை அறிந்திருந்த தெய்வமே
நான் வெளிப்படுமுன்பே எனை அர்ச்சித்த தெய்வமே
உள்ளங்கையில் பொறித்து வைத்துக் காத்த தெய்வமே
போற்றுகிறேன் புகழுகிறேன் வாழ்த்துகிறேன் வணங்குகிறேன்

1. புதிய வாழ்வொன்றை எனக்கு நீ தந்தாய்
புதிய பாதையையும் எனக்குக் காட்டித் தந்தாய் - 2
புதிய வாழ்வினில் புனித பாதையில் - 2
புதிதாய் நான் செல்லும் புனிதப் பயணத்தில்
புலரும் விண்மீனாய் விரைந்து நீ வா
புதிய மனிதனாய் எனை மாற்ற வா - போற்றுகிறேன்

2. இரவிலும் பகலிலும் இணைந்தே வாழ்கிறீர்
இன்ப துன்பத்தையும் இனிதே பகிர்கிறீர் - 2
இன்றைக்கு இருந்து நாளைக்கு அழியும் - 2
இந்த உலகத்தின் படைப்புகள் யாவையும்
இரக்க உணர்வோடு காத்து வருகிறீர்
இகமதில் உமைப் புகழ வாய்ப்பளிக்கிறீர் - போற்றுகிறேன்
1341.ஐம்பது ஆண்டுகள் பொன்போல பொதிந்தென்னை
ஐம்பது ஆண்டுகள் பொன்போல பொதிந்தென்னை
கைமீது வைத்திருந்தாய்
தெய்வீகப் பாதையில் அன்பான சேவையில்
என்னை நீ காத்து வந்தாய் - 2
நாள்தோறும் பலியில் நான் வாழும் நெறியை
நல்லாயன் காட்டி நின்றாய் - 2

1. முன்வந்த என்னை உனதாக்கினாய்
உன் கையில் வாழ்வைப் புதிதாக்கினாய் - 2
வெறும் கல்லும் கனியாகிச் சிறு சொல்லும் கவியாகி
அகல்கூட நிலவாகி வெயில் தந்ததே - 2 உன்
அருளாலே என் பணிகூட பலன் தந்ததே

2. இன்பத்தில் துன்பத்தில் துணையாகினாய்
என் சேவை அனைத்திற்கும் பொருளாகினாய் - 2
விழிநீரைத் துடைக்கின்ற விரல்காணும் இதம்போல
வழியெங்கும் பணிசெய்து நிறைகாணவே - 2 உன்
அழியாத மகிழ்வாலே எனை மூடினாய்
1342.குருத்துவப் புகழ் ஓங்கவே
குருத்துவப் புகழ் ஓங்கவே
செந்தமிழ் நாவில் எழுந்த இப்பாவில்
சிறந்த நம் திருமறைத் தொண்டர்கள் வாழியவே
குருத்துவப் புகழ் ஓங்கவே
பணிவிடை பெற அன்று பணிவிடை புரியவும் - 2
பலரின் வாழ்வுக்குப் பலியாய் வாழவும் - 2

1. காவிரி தென்பெண்ணை பாய்ந்து வரும் - வண்ண
பூவிரிச் சோலைகள் பூத்து நிற்கும் ஆ - 2
வங்கக் கடல் அலைகள் தாலாட்டும் ஆ - 2
தங்கத் திருநாடாம் தமிழக மண்ணதில்
எங்கும் இயேசு எனும் நாமம் முழங்கிட முழங்கிடவே - 2

2. இயல் இசை நாடக அரங்கினிலே - உயர்
இலக்கியம் எழுந்திடும் ஏட்டினிலே ஆ
தாயகப் பண்பாட்டின் சிறப்பினிலே ஆ - 2
ஆயக் கலைகளெனும் அறுபத்து நான்கிலும்
நாயகன் இயேசுவின் நற்செய்தி ஒலித்திட ஒலித்திடவே - 2
1343.சம்மதமே இறைவா சம்மதமே தலைவா
சம்மதமே இறைவா சம்மதமே தலைவா - உன்
மாலையிலே ஒரு மலராகவும் பாலையிலே சிறு மணலாகவும்
வாழ்ந்திட சம்மதமே இறைவா மாறிட சம்மதமே

1. தயங்கும் மனதுடைய நான் உனக்காகவே
உன் பணிக்காகவே வாழ்ந்திட வரம் தருவாய் - 2
கருவாக எனைப் படைத்து - உயர்
கண்மணியாய் எனை வளர்த்து - 2
கரமதிலே உருப்பதித்து கருத்துடனே என்னைக் காக்கின்றாய்

2. மலையாய் நான் கணித்த பெரும் காரியமும்
உயர் காவியமும் மறைந்தே போனது - 2
திருவாக உனை நினைத்து - உயர்
உறவாகவே நெஞ்சில் பதித்து - 2
உன் பெயரைச் சாற்றிடவே நலம் தரவே என்னை அழைக்கின்றாய்
1344.தாயின் கருவில் என்னை அன்பு தேவன் அறிந்திருந்தார்
தாயின் கருவில் என்னை அன்பு தேவன் அறிந்திருந்தார்
வாழ்வில் உறவு தந்து எந்த நாளும் வளர்த்து வந்தார்
என்னென்ன ஆனந்தம் என் நெஞ்சில் கண்டேனே
உன்னோடு நான் கண்ட சொந்தங்கள் எந்நாளும் வாழ்க
அந்தத் தேவன் தந்த வாழ்க்கை அழகானது
வந்து போகும் இந்த நாள்கள் இனிதானவை காணுதே என் மனம்

1. வாராது வந்த வாழ்வினில் நான் காணும் வாலிபம்
வாழ்வாங்கு வாழ நீயுமே சொன்ன யாவும் ஞாபகம் - 2
ஒரு வழியில் ஆசைகள் மனித துயர் ஓசைகள் - 2
இன்பங்களாய் என் உலகமும் எழுவதை நான் காண வேண்டும்

2. நெஞ்சோடு செய்த வேள்வியில் நான் காணும் கேள்விகள்
அஞ்சாது அன்று நீயுமே சென்ற பாதையின் தெளிவுகள் - 2
அறநெறியில் ஆட்சியும் அன்புவழி வாழ்க்கையும் - 2
ஓ தேவனே என் உலகினில் எழுவதை நான் காண வேண்டும்
1345.நானே உன் கடவுள் முதலும் முடிவுமாய்
நானே உன் கடவுள் முதலும் முடிவுமாய்
நானே இருக்கிறேன் என் மக்களின் துன்பங்கள் கண்டேன்
அவர் மனம் படும் வேதனை உணர்ந்தேன்
அவர் அழுகுரல் நான் கேட்டேன்
நாடும் நலமும் வாழ்வும் வளமும் வழங்கிட மனம் உவந்தேன்
யாரை நான் அனுப்புவேன் யாரை நான் அனுப்புவேன்
எனை அனுப்பும் எனை அனுப்பும் - 2

இதோ நான் இருக்கிறேன்
உலகம் அறியா எளியவன் வாய்மொழி பேசா சிறியவன்
உன் துணை இருந்தால் என்னுடன் நடந்தால்
துணிவுடன் நான் செல்வேன்
எனை அனுப்பும் எனை அனுப்பும் இதோ நான் இருக்கிறேன்

2. நானே உன் கடவுள் வான் படைகளின் இறைவனாய்
நானே இருக்கிறேன் என் பெயரால் செல்பவர் யாரோ
என் செய்தியைச் சொல்பவர் எவரோ என் பணியினைச் செய்வாரோ
அன்பும் அறமும் நீதியும் நேர்மையும் நிலைநிறுத்திடுவாரோ
யாரை நான் அனுப்புவேன் - 2 எனை அனுப்பும்
1346.நீ என் மகனல்லவா உன்னை அழைத்ததும் நானல்லவா
நீ என் மகனல்லவா உன்னை அழைத்ததும் நானல்லவா - 2
கலக்கம் வேண்டாம் கவலை வேண்டாம்
காலம் முழுவதும் உடனிருப்பேன்
ஆண்டவரின் ஆவி என் மேலே - ஏனெனில்
என்னை அருள்பொழிவு செய்தார் ஆண்டவர் வாழ்க - 2

1. அழுகைக்குப் பதிலாய் அரவணைக்க
நலிவுற்ற நெஞ்சத்திற்கு உறுதியூட்ட - 2
மேடு பள்ளங்களைச் சமன் செய்ய - 2
ஏற்றத்தாழ்வுகளை வேரகற்ற உன்னைத் தேர்ந்துள்ளேன்
அழிக்கவே ஆக்கவே உன்னை அனுப்புகிறேன் - ஆண்டவரின்

2. இடிந்து கிடப்பதைச் சீர்படுத்த
அழிந்து போனதை உருவாக்க - 2
வாழ்வை இழந்தோர் வாழ்வு பெற - 2
சிறையில் வாடுவோர் விடுதலையாய் உன்னைத் தேர்ந்துள்ளேன்
படைக்கவே வளர்க்கவே உன்னை அனுப்புகிறேன் - ஆண்டவரின்
1347.நீயே துணை எனக்குன் நிழலே துணை
நீயே துணை எனக்குன் நிழலே துணை
நீயே துணை எனக்குன் நிழலே துணை - 2
வானின்று வந்த தெய்வம் எந்தன் இயேசுவே
வழிகாட்ட வா தென்றலே

1. ஏழையின் கண்ணீர் துடைத்திடவே என்னுள்ளம் வருவாயே
எளியோர்க்குச் செய்தி அறிவிக்கவே
என்னையும் நீயும் அழைத்தாயே - 2
வண்ணப் பூவிதழ் வாசம் சிந்திடும் உந்தன் மொழியன்றோ
வரம் பொழியும் அந்த வானமன்றோ - 2

2. உறவை இழந்து நான் தவிக்கையிலே உறவாக வந்தாயே
உயிர்மூச்சுக் காற்று தந்தென்னை
இறைவாழ்வில் நிலைக்கச் செய்தாயே - 2
உந்தன் சந்நிதி நாடி வந்தது எந்தன் உயிரன்றோ
உன்னருள் தரும் அந்த வானமன்றோ - 2
1348.மகிழ்ந்திடாய் மாநிலமே - உந்தன்
மகிழ்ந்திடாய் மாநிலமே - உந்தன்
மைந்தரின் மாட்சியிலே - இன்று
பேரருள் பாய்ந்தது குருத்துவத்தால் - என்று
புகழ்ந்திடாய்த் திருமறையே - 2

1. உலகத்தின் பேரொளியாய் - வாழும்
உள்ளத்தின் ஆறுதலாய் - எந்தக் - 2
காலமும் வாழ்ந்திடும் எழில் நிலையாம் - இன்பக்
காட்சியே குருத்துவமே - 2

2. குருத்துவ நீர்ச்சுனையாய்த் - திகழ்
கிறிஸ்துவை ஈன்றவளே - இன்று - 2
காய்ந்திடும் பாருக்கு நீர் தெளிக்க - வரும்
குருக்களைக் காத்திடுவாய் - 2
1349.மாறாதது உன் பாசமே மறையாதது உன் நேசமே
மாறாதது உன் பாசமே மறையாதது உன் நேசமே
மாறாதது மாறாதது மாறாத உன் பாசமே
மறையாதது மறையாதது மறையாத உன் நேசமே
நிலையானது நிசமானது நெஞ்சத்தில் நீங்காதது
என் நினைவெல்லாம் நிழலாடுது

1. என் அன்னையின் கருவில்
என்னை நீ என்னை நீ தெரிந்தெடுத்தாய்
உன் கண்ணின் கருவிழி போல்
கருத்தாய் கருத்தாய்க் காத்து வந்தாய்
எனை அள்ளி எடுத்து அணைத்துக் கொண்டாய்
உன் தோளில் சுமந்து நடந்து வந்தாய்
வாழ்வு முழுவதுமே இனிக்கச் செய்தாய்
வானின் மழையெனவே நின் அருளைப் பொழிந்தாய்
உன் பாசம் மாறாதது உன் நேசம் அழியாதது

2. உன் உறவென்னை வெறுக்க உறவாய் உறவாய் நீ வந்தாய்
நான் உன்னோடு இருப்பேன் என்று நீ மட்டுமே உறுதி தந்தாய்
என் பயணம் முழுதும் தொடர்ந்து வந்தாய்
என் களைப்பு போக்க உன் மடியைத் தந்தாய்
துன்பமில்லா வாழ்வைத் தந்தாய்
இன்பம் காணும் உலகம் தந்தாய் - உன் பாசம்
1350.யாரை நான் அனுப்புவேன்
யாரை நான் அனுப்புவேன்
என் மக்களின் விடுதலைக்காய்
இதோ நான் இருக்கின்றேன் என்னை அனுப்பிவிடும்

1. எகிப்தில் நம் மக்களுக்கு ஏற்பட்டுள்ள
தொல்லைகளைக் கண்ணுற்றோம்
வேலை வாங்கும் மேற்பார்வையாளரின்
கொடுமையின் பொருட்டு அவர்கள் இடுகிற
கூக்குரலையும் கேள்வியுற்றோம்
அவர்களை எகிப்தியரின் கைகளினின்று
விடுவிக்க இறங்கி வந்தோம்
நீ வா அதற்காக உன்னை அனுப்பினோம்
நாமே உன்னோடிருப்போம்
என்னோடு நீயிருக்க எனக்குக் குறையில்லை
அறியாதமந்தை தெரியாதஇடங்கள்என்றும்தயக்கமில்லை- 2
இம்மக்கட்காய்ப் பணியாற்ற என்னையே தருகின்றேன்

2. நீ போய் இந்த மக்களுக்கு கேட்டும் கேட்டும் உணர மாட்டீர்கள்
பார்த்தும் பார்த்தும் நீங்கள் அறியீர்கள் என்று சொல்வாயாக
இதோ நம் நெருப்புத் தழல் உன் உதடுகளைத் தொட்டது
நீ வா அவர்களிடம் உன்னை அனுப்பினோம்
உன்னை இறைவாக்கினராய் ஏற்படுத்தினோம்
என்னை நீ அழைத்ததால் எனக்குப் பயமில்லை
பாவங்கள் உண்டு பலவீனமுண்டு என்றும் தயக்கமில்லை - 2
உன் துணையில் பணியாற்ற என்னையே தருகின்றேன்