முகப்பு


1479.ஆழியின் மேல் ஒளிர் விண்மீனே
ஆழியின் மேல் ஒளிர் விண்மீனே
அவனியில் இறைவனின் அன்னையும் நீ
என்றும் கன்னிகை ஆனவளும்
எழிலார் விண்ணக வாயிலும் நீ

1. தூதுவன் வாழ்த்துரை ஏற்றாய் நீ
தூயநல் அமைதியை அளிப்பாய் நீ
ஆதியில் ஏவாள் செய்வினையை
அகற்றி அவள் பெயர் மாற்றிடுவாய்

2. பாவத்தளைகளை அறுத்திடுவாய்
பரிவுடன் குருடர்க் கொளி தருவாய்
தீமைகள் அனைத்தும் போக்கிடுவாய்
திருவருட் கொடைகள் பெற்றளிப்பாய்

3. தாயென உன்னைக் காட்டிடுவார்
தனயர் எமக்காய்ப் பிறந்தவரும்
இயேசுவாய் உன்னிடம் உதித்தவரும்
எம்குறை உன் வழி ஏற்றிடுவார்

4. நிகரில்லாத கன்னிகையே
நிர்மல சாந்த குணவதியே
பாவப் பொறுத்தல் பெற்றெமக்கு
பண்போடு புனிதம் அருள்வாயே

5. புனித வாழ்க்கை வாழ்ந்திடவே
பயணம் நன்கு முடிந்திடவே
அதனால் இயேசுவை யாம் கண்டு
அகமகிழ்ந்திடவே அருள்வாயே

6. வானகத் தந்தையை வாழ்த்திடுவோம்
வானுயர் கிறித்துவை வணங்கிடுவோம்
தூய ஆவியைப் பணிந்திடுவோம்
பாகுபா டற்ற புகழ் சாற்றிடுவோம் - ஆமென்
1480.வையகம் மகிழ்ந்து இங்குக் கொண்டாட
வையகம் மகிழ்ந்து இங்குக் கொண்டாட
வானகம் புகழ்தனை நின்றெதி ரொலிக்க
அப்போசு தலர் தம் புகழ்தனை ஈண்டு
வானமும் வையமும் இணைந்திசை பாட

1. மனிதர் தமக்கு நீதியும் வழங்கி
உலகின் உண்மை ஒளியாய் விளங்கும்
உங்கள் திருமுன் இதயக் குறைகள்
எடுத்தே உரைத்தோம் எம் குரல் கேட்டோம்

2. விண்ணக வாயிலைத் திறக்கவும் மூடவும்
எண்ணரும் ஆற்றல் கொண்டவர் நீங்கள்
எங்கள் பாவத் தளைகள் தெறிக்க
உங்கள் ஆணை தந்தருள் செய்வீர்

3. உலகோர் தமக்கு நீதி வழங்கிட
உலகின் முடிவில் வந்திடும் கிறித்து
முடிவே இல்லா பேரருள் வாழ்வை
அடைந்திட எம்மை அழைத்திடச் செய்வீர்

4. தந்தை திருமகன் தூய ஆவி
வந்தனம் வாழ்த்து புகழோடு பெறுக
ஆதியில் இருந்தது போலவே இதனை
ஓதுவோம் என்றும் என்றுமே - ஆமென்
1481.ஆண்டவர்க்குகந்த புனிதரிதோ
ஆண்டவர்க்குகந்த புனிதரிதோ
மாந்தர் அனைவரின் புகழ்பெற்றார்
ஈடிணையில்லா வந்தனையும்
இன்றே பெறவும் தகுதி பெற்றார்

1. புனிதம் தகைமை தாழ்ச்சியுடன்
பொற்புரு கற்புக் கணிகலனாய்
உடலில் உயிரும் உள்ள வரை
உன்னத வாழ்வும் வாழ்ந்தாரே

2. அவரது புனித வாழ்க்கையினால்
ஆயிரம் பேர்கள் ஆங்காங்கே
அவல நோய்கள் கொண்டவர்கள்
அற்புதமாகவே குணம் பெற்றார்

3. ஆகவே நாமும் அவையாக
அவரது புகழ்தனைப் பாடுவதால்
உற்ற அவரது வேண்டுதலால்
உதவிகள் பெற்று மகிழ்வோமே

4. விண்ணக அரியணை மேலமர்ந்து
மின்னிடும் ஒளியில் வீற்றிருந்து
மூவுலகெல்லாம் ஆண்டு வரும்
மூவோர் இறைவன் வாழியவே

1482.செருக்கும் கொடுமையும் செறிந்தநம் பாவத
செருக்கும் கொடுமையும் செறிந்தநம் பாவத்
திரள்கள் இறைவனின் மாசில்லா
இருதயம் தன்னைப் பிளந்ததைப் பாரீர்!
இவ்விதம் வதைபெற என் செய்தார்?

2. ஆர்வம் தயங்கிய வீரனைக் கூட்டி
ஆணை தந்ததும் நம் பாவம்
கூர்மையான ஈட்டியைக் கொண்டு
குத்தித் திறந்ததும் நம் பாவம்!

3. திறந்த இதயத்தில் நின்று பிறந்தான்
திருஅவை கிறித்துவின் மணவாளி
சிறந்த வாசல் பேழையுட் செல்ல!
திருத்தி மனிதன் மீட்புறவே!

4. சிந்தும் செம்மறி உதிரத்தில் நமது
சிறுமைக் கறைகளைப் போக்கிடவே
இந்த இதயத்தில் நின்றெழும் நதிகள்
ஏழும் அருள்தரும் எந்நாளும்

5. இன்னும் தவறி இத்திரு இருதயம்
ஏங்கிடச் செய்தல் இழிவாகும்!
அன்பைக் காட்டும் அனற்பிழம் பதனை
அகத்தில் வளர்த்தல் நலமாகும்!

6. மகிமை உமக்கு இயேசுவே! எமக்கு
வரம்நும் இதயம் பொழிந்திடுமே
மகிமை தந்தைக்கும் அன்பின் ஆவிக்கும்
இனறும் என்றும் ஆகுகவே! - ஆமென்
1483.காலத்தின் ஆண்டவர் நீர் என்று
காலத்தின் ஆண்டவர் நீர் என்று
களிப்புடன் கிறித்துவே! உமையேற்கின்றோம்
ஞாலத்தின் மன்னவர் நீரென்றும் - ஒரே
நாயகன் என்றும் உமையேற்கின்றோம்

2. வன்மனங் கொண்டவர் உமைத் தமது
மன்னவர் என்றிட மறந்தாலும் நீர்
உன்னத மன்னர் என ஏற்று - உமை
உளமகிழ் வோடு புகழ்ந்தார்ப்பரிப்போமாக

3. அமைதியின் அரசரே! கிறித்துவே!
ஆர்த்தெழும் மாந்தரை உமதாக்கிடுவீர்!
இமையெனக் காத்திடப் பிரிந்தவரை - ஒரே
மந்தையில் கொண்டு சேர்ப்பீர் அன்பால்!

4. விரிந்துள்ள கரத்துடன் சிலுவையிலே
மேவிடும் உதிரம் சிந்தியன் பாலே
எரிந்திடும் இதயத்தைக் காட்டுகின்றீர் - ஆம்
இதனால் அன்பு தெரிகிறதன்றோ?

5. பீடத்தில் அப்பம் இரசகுணத்தில்
பிரியமாய் உறைவதும் இதனால் அன்றோ?
தேடும் மக்கள் எம்மீது - உம்
திருவருள் மீட்பைப் பொழிந்தருள்வீரே!

6. உலகத்தை ஆள்வோர் உமை ஏற்று
உவப்புடன் புகழ்க வெளிப்படையாக!
கலைகள் உம் அழகின் ஒளிவீசி - சட்டம்
காட்டுகவே உம் ஒழுங்குக ளெல்லாம்!

7. அரசர்கள் உமக்கே தமைப் பணிவாய்
அளிப்பதில் மகிமை பெறுவாராக!
நிரந்தரம் வீட்டையும் நாட்டையுமே - இன்பம்
நிலவும் ஆட்சிக் குவந்தளிக் கின்றோம்.

8. உலகின் அரசர் அனைவரினும்
உயர்ந்து விளங்கும் இயேசுவே உமக்கும்
நலம்நிறை தந்தைக்கும் ஆவிக்கும் - எந்த
நாளுமே மகிமை உண்டாகுகவே! - ஆமென்
1484.இறைவனின் அன்பர்கள் அனைவருக்கும்
இறைவனின் அன்பர்கள் அனைவருக்கும் - அவர்
இனிய தம் ஆவியின் வழியாக
நிறைவுற வைத்துள்ள யாவையுமே - மனம்
நினைக்கவும், கண்கள் பார்த்திடவும்,
குறையறக் காதுகள் கேட்டிடவும் - தினம்
கூடுமோ? நமக்கு எடுத்துரைத்தார்
வறியவர் தந்தை; இதய ஒளி நிதம்
வருத்தத்தில் ஆறுதல், துயரில் பலம்.

2. உலகத்தில் இருப்பவர் யாவரினும் - நம்
உள்ளத்தில் உறைபவர் உயர்ந்தவரே!
நலம் தரும் துய ஆவியினால் - மீட்பின்
நாள்வரை முத்திரை இடப்பெற்றோம்
கலங்கிடச் செய்யும் ஆவியல்ல - அவர்
கருணையும் ஆற்றலும் கொண்டவராம்
துலங்கும் மகனின் ஆவியவர் - என்றும்
துணிந்தே ‘தந்தாய்’ என்றிடுவார்.

3. அவர் நம்மில் நிலைத்ததும் நாமறிவோம் - நாம்
அவரில் நிலைத்ததும் நாமறிவோம்
அவரே தம் ஆவியை நமக்களித்தார் - அவர்
அருளுக்கும் வாழ்வுக்கும் ஊற்றானார்
அவர் கொடை ஏழுக்கும் தந்தையானார் - உயர்
அறிவும் திருவும் தரலானார்
அவர்தம் சட்டம் நம் மனத்தில் உண்டு
அவரில் அனைவரும் வாழ்கின்றோம்.

4. அனைவரையும் நாம் அறிவதனால் - அங்கு
அறிமுகம் ஏதும் தேவையில்லை
மனிதரின் நடுவில் நம் வீட்டை - மிக
மகிழ்வுடன் இறைவன் அமைத்து விட்டார்!
அனைவரும் அவர்தம் மக்களாவர் - இனி
அவர்களின் இறைவன் அவராவார்
அனைத்தும் புதுமை ஆகிடுமோ - துயர்
அழுகை மரணம் ஏகிடுமோ
1485.அமைதியின் காவல் அதிதூதர் ஆய மிக்கேல் எமதில்லம்
அமைதியின் காவல் அதிதூதர் ஆய மிக்கேல் எமதில்லம்
விரைவில் வந்து எமைக் காக்க வாழ்த்தி அனுப்பி வைப்பாயே
குறைகள் நீங்கும் அவர் வரவால் எல்லாம் இனிதே நடந்தேறும்
இறைவா கிறித்து பெருமானே இறைஞ்சி நிற்போம் இவ்வரமே

வலிமை வாய்ந்த நின் தூதர் கபிரியேல் வானிருந்து
கொலை செய் பழைய பகைவன் தன் கொடுமை வன்மம் இவ்வரமே

நலமார் எங்கள் கோயிலுக்குத் தலைவா அனுப்பி வைப்பாயே
பலகால் எம்மோ(டு) உன் தூதர் பழக இங்கே வர வேண்டும்

எல்லாருக்கும் மருத்துவராம் ஏதமில் தூதர் ரபாயேல் - எம்
இல்லம் வந்து நலமற்றார் எவரும் நோய், பிணி, துயர் நீங்கி,

நல்ல நிலைபெற எம் இறைவா நாளும் அவரை அனுப்பிடுவீர்
பொல்லாப்பெல்லாம்யாம்தவிர்த்துபொன்றாப்புகழ்உமக்கீந்திடுவோம்

வானோர் புகழே வாழ் முதலே வாழ்க கிறித்து பெருமானே!
வானின் தூதர் கணமெல்லாம் வந்தெம் மோடு தங்குகவே

விண்ணக அரியணை மேலமர்ந்து மின்னிடும் ஒளியில் வீற்றிருந்து
மூவுலகெல்லாம் ஆண்டுவரும் மூவோர் இறைவன் வாழியவே!
- ஆமென்
1486.பாடுவாய் என் நாவே மாண்புமிக்க உடலின் இரகசியத்தை
பாடுவாய் என் நாவே மாண்புமிக்க உடலின் இரகசியத்தை
பாரின் அரசர் சீருயர்ந்த வயிற்றுதித்த கனியவர்தம்
பூதலத்தை மீட்கச் சிந்தும் விலைமதிப்பில் லாதுயர்ந்த
தேவ இரத்த இரகசியத்தை என்றன் நாவே பாடுவாயே

அவர் நமக்காய் அளிக்கப் படவே மாசில்லா கன்னியினின்று
நமக்கு என்றே பிறக்கலானார் அவனி மீதில் அவர் வதிந்து
அரிய தேவ வார்த்தையான வித்ததனை விதைத்த பின்னர்
உலகவாழ்வின் நாளை மிகவே வியக்கும் முறையில் முடிக்கலானார்

இறுதி உணவை அருந்த இரவில் சகோதரர்கள் யாவரோடும்
அவர் அமர்ந்து நயமனத்தின் உணவை உண்டு நியமனங்கள்
அனைத்தும் நிறைவு பெற்ற பின்னர் பன்னிரண்டு சீடருக்கு
தம்மைத் தாமே திவ்ய உணவாய்த் தம் கையாலே அருளினாரே

ஊன் உருவான வார்த்தை யானவர்
வார்த்தையாலே உண்மை அப்பம்
அதனை சரீரம் ஆக்கினாரே இரசமும் கிறித்து இரத்தமாகும்
மாற்றம் இது நம் மனித அறிவு முற்றிலும் கடந்த தெனினும்
நேர்மையுள்ளம் உறுதிகொள்ள மெய் விசுவாசம் ஒன்றே போதும்

மாண்புயர்இவ்வருளடையாளத்தைத் தாழ்ந்துபணிந்துஆராதிப்போம்
பழைய ஒழுங்கு முறைகள் அனைத்தும்இனி மறைந்து முடிவுபெறுக
புதிய ஒழுங்கு முறைகள் வருக புலன்களாலே மனிதர் இதனை
அறிய இயலாக் குறையை நீக்க நம்பிக்கையின் உதவி பெறுக

தந்தை அவர்க்கும் மகன் அவர்க்கும் புகழ்ச்சியோடு வெற்றியார்ப்பும்
மீட்பின் பெருமை மகிமையோடு வலிமை வாழ்த்து யாவும் ஆக
இருவரிடமாய் வருகின்றவராம் தூய ஆவி யானவர்க்கும்
அளவில்லாத சமப் புகழ்ச்சி என்றுமே உண்டாகுக - ஆமென்